பாடசாலை ஆங்கில கல்வித் திட்டமும் எனது கருத்தும்

பாடசாலை ஆங்கில கல்வித் திட்டம் பற்றிய ஒரு ஆய்வினை கேள்வி பதிலாக
ஆறாம்திணை இணையத் தளத்தில் காணக்கிடைத்தது. அதை வாசிப்பதில் எழுத்துரு (Font) சிக்கலாக இருப்பதால் அதில் சிலப் பகுதிகளை இங்கே இட்டுள்ளேன். இது ஆங்கில கல்வி தொடர்பான ஆக்கம் என்பதால்  இதனை கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

தமிழகக் கல்வி வட்டாரத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் அதனை மேம்படுத்தும் முயற்சிகளுக்காக அறியப்பட்டவர் பேராசிரியர் சரசுவதி. ஐதரபாத் CIEFL நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். ஆங்கில மொழி ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர். பல அரசு பாடநூல்களின் ஆசிரியர். கல்வியிலும் புத்தகங்கள் இயற்றுவதிலும் ஆர்வமுடையவர். மொழிக் கல்வி பற்றிய தமது எண்ணங்களை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து . . .

என "சாய்ராம்" என்பவரின் கேள்விகளுக்கு பேராசிரியர் சரசுவதி அவர்கள் அளித்த பதில்கள்.

கேள்வி: கல்லூரியளவில் ஆங்கிலக் கல்வியின் தேவையும் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

12 ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலம் கற்று, கல்லூரிக்கு வரும் பல மாணவர்களால் ஆங்கிலத்தில் சரியாகப் பேச முடியாததைத் தான் பார்க்கிறோம். என்ன காரணம்?

பாடத்திட்டங்கள் சரியில்லையா?

மாணவர்கள் ஆர்வம் இல்லையா?

ஆசிரியர்களுக்குத் திறமையில்லையா?

பதில்: மாணவர்களுக்கு ஆர்வமில்லையென்று சொல்ல முடியாது. காரணம் பல பேர் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுவதற்காக நிறையப் பணம் செலவழித்துத் தனியார் நிறுவனங்களில் ஆர்வத்துடன் சேர்கிறார்கள்.

ஆசிரியர்களைக் கேட்டால் "பாடங்களை சரியாகத் தான் கற்பிக்கிறோம்" என்பார்கள்.

நமது பாடத்திட்டத்தில் பல குறைகள் இருக்கின்றன.

பேச்சுத் திறனுக்கு பாடத்திட்டத்தில் இடமில்லை. வெளிநாட்டில் வேலைக்குச் சேரும் பல பொறியியல் வல்லுனர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் பலர் ஆங்கிலத்தைச் சரியாகப் பேச முடியாததனால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி: நமது பாடத்திட்டங்கள் 50 ஆண்டுகள் பழமையானது.  அதிலே சிற்சில மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. அப்பொழுது ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தக் காலம். அவர்களை திருப்திப் படுத்துவதற்காக ஆங்கில இலக்கியத்தைக் கற்று கொண்டிருந்தோம். ஆனால் நிலைமை இன்னும் மாறவில்லை. தமிழ் மாணவர்கள் ஆங்கில இலக்கியத்தைக் கற்றுக் கொள்ள முடியாமல் நிட்டூரு போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர்களோ சேக்ஸ்பியரும், செல்லியும் முக்கியமானவர்கள் என்பார்கள். ஆனால் சாதாரன மாணவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. இதற்கு என்ன தான் தீர்வு?

பதில்: ஆங்கிலம் கற்பதைத் தேவை சார்ந்த கல்வியாக்க வேண்டும் என்பேன். எழுதும் திறமையை, பேசும் திறமையை வளர்ப்பதாய் ஆங்கில கல்வி அமைய வேண்டும் என்பேன்.

நமது தேர்வு முறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மாணவர்களின் நினைவுத்திறனைத் தான் நமது தேர்வுகள் சோதிக்கின்றன. அவர்களது அறிவிணை அல்ல.

மாணவர்கள் தேர்வு வழிக்காட்டிப் புத்தகங்களைப் படித்தாலே போதுமானது என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இப் புத்தகங்களில் இருப்பவற்றை மனப்பாடம் செய்து நல்ல ஆங்கிலத்தில் எழுதி விட்டால் மதிப்பெண்கள் பெற்று விடலாம். ஆசிரியர்கள் கூட இலக்கியம் வாசிக்காமல் பாடங்களை கற்பிக்க முடியுமென்ற சூழ்நிலை தான்.

ஆங்கில மொழியறிவு தான் வேலையைப் பெற்றுத் தருகிறது.

நாம் மேற்குமயமான கல்வித்திட்டத்தில் இருக்கிறோம். நமது கலாச்சாரத்துடன், நமது வேர்களுடன் தொடர்பு கொண்ட கல்வித்திட்டம் வேண்டும்.

நமது கல்வி சமூகத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கே பெரும்பாலும் உதவுகிறது. அது எல்லோரையும் சென்றடைய வேண்டும். ஆங்கில மொழியறிவு இல்லாதவர்கள் சில மட்டங்களைச் சென்றடைய முடியாத நிலை தான் இன்றைக்கும் இருக்கிறது.

ஆங்கிலம் தான் இந்தியாவை மூன்றாம் உலக நிலையிலிருந்து முன்னேற்றும் கருவியாக உதவும்.

இவ்வாறு பேராசிரியர் சரசுவதி அவர்கள் கூறுயுள்ளார்.

நன்றி
ஆறாம்திணை

எனது கருத்து

உலகமயமாக்கலில் தொடர்பாடல்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு நாடுகளுக்குள் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் பாரியளவில் பெருகிவரும் நிலையில், உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக ஆங்கிலமொழி வளர்ச்சி கண்டிருப்பதுடன்,
அதனைக் கற்க வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.  இதனைக்  கருத்தில் கொண்டு ஆங்கில கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

எம்மவர்களின் ஆங்கில கல்வி வளர்ச்சிக்கு பாடசாலை ஆங்கில பாடத் திட்டமுறைகளில் மாற்றம் அவசியம் என்றே எனக்கும்  தோன்றுகின்றது. பல வருடங்கள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றாலும் எளிதில் புரியக்கூடியதாக பாடசாலை ஆங்கிலப் பாடத் திட்டம் இல்லை என்பதே பலரதும் கருத்தாகும்.

இவ்விதக் கல்வி திட்டமே  பலருக்கு ஆங்கிலம் கசக்கும் பாடமாக இருப்பதாகவும் பார்க்கின்றோம். உண்மையில் ஆங்கிலம் மிக மிக இலகுவான ஒரு பாடம், அதை முறையாக விளங்கிக் கற்றோமானால்.

ஆங்கிலக் கல்வியில் மட்டுமன்றி சகல பாடங்களிலும் முறையான காலத்திற்கேற்ப மாற்றம்  அவசியம் என்பதையே நானும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

"ஆங்கிலம்" பாடத்தில் மட்டுமன்றி சகலப் பாடங்களிலும் இன்று எத்தனையோ இலகுவான நவீன திட்டங்கள் உலகளவில் காணப்படுகின்றது. இவை  எமது சமுதாயத்திற்கு கிடைப்பதாக எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு எட்டாத கணியாகவே இருக்கின்றது.

இன்றையக் காலக் கட்டத்தில் எமது சமூக வளர்ச்சிக்கு ஆங்கிலம் அவசியம் என்பதில் எனக்கு இரண்டு கருத்துக்கள் கிடையாது.

இத்தாலி, நெதர்லாந்து, பிரான்சு, யப்பான் போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்தோரும், தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றோரும் பொதுவாக முன் வைக்கும் ஒரு காரணம் அந்த நாடுகளிலெல்லாம் ஆங்கிலம் கற்று ஒன்றுமே செய்ய முடியாது என்பதாகும். ஆம்,  அது அந்நாட்டு அரச நிர்வாகப் பலமும்,  ஆட்சி அதிகாரங்களும் முக்கிய காரணியாக இருக்கிறது. மேலும் பொருளாதார வளர்ச்சியும் முக்கியப் பங்கு வகிக்கிறது.  இதனால் அனைத்து புதியப் புதியக் கண்டுப் பிடிப்புகளும், அறிவியல் ஆக்கங்களும், தொழில் நுட்பத் தகவல்களும்,  விளம்பரங்களும் அவர்கள் மொழியிலேயே கிடைக்க அந்நாட்டு அரசு வழி வகுக்கிறது. அதனால் மேற் கூறியக் கருத்து அந்நாட்டவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம். அந்நிலைக்கு அந்தந்த நாட்டவரின் மொழிப்பற்றும் முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் நமக்கு?

ஒரு வரையரைக்கு மேலே சென்றால் தமிழில் கற்பதற்கான கற்கை நெறிகளோ, புத்தகங்களோ இல்லை என்பதே உண்மையாகும். எமது மொழியில் எப்புதியக் கண்டுப்பிடிப்புகள் என்றாலும் அவற்றிற்கான விளம்பரமோ, அறிவியல் தொழில் நுட்பத் தகவல்களோ உடனே கிடைப்பதில்லை. காலம் கடந்து வரும் தகவல்களும் முழுமையானதாக இல்லை. 

இத்தாலிக்கோ, யேர்மனிக்கோ, யப்பானிற்கோ சென்ற ஒருவருக்கு அந்நாட்டு சொல் ஒன்றிற்கான அர்த்தம் அறிந்துக்கொள்ள அவசியம் என வைத்துக்கொள்வோம்,  அப்போதும் அதற்கு ஆங்கில அகராதி தானே தேவைப்படுகின்றது.  உலகில் உள்ள எல்லா மொழியிலும் தமிழ் அகராதி உள்ளதா?  ஆனால் உலகின் முன்னனி மொழிகள் அனைத்திலும் ஆங்கில அகராதி உள்ளது என்பது உங்களுக்கும் தெரியும்.

நாம் தமிழ் மீதுப் பற்றுக் கொண்டு அதன் முயற்சிக்கு உழைக்க விரும்பினாலும் முதலில் ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழுக்கு மொழிமாற்றும் பணியை செய்ய முனைந்தாலே பாரிய ஓர் பணியைச் செய்ய முடியும்.

இன்று பல இணையத்தளங்களில் காணப்படும் தகவல் நுட்பத் தகவல்களில் அதிகமானவை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றுபவைகளாகவே இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். 

இன்று இணையத்தில் காணப்படும் என்னற்ற இணைய வசதிகளை நாம் தமிழில் பெற்றுக்கொள்கின்றோம் என்றால் அது ஆங்கிலம் கற்ற தமிழ் பற்றாளர்களாலேயே என்பது வெள்ளிடை மலை. ஒரு இணணயத்தளத்தின் வசதியை பயன்படுத்தும் நாம் அதுத் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் குறிப்பிட்ட தளத்தினரிடமிருந்து பதிலை எந்த மொழியில் பெற்றுக்கொள்வது? ஆங்கிலம் தெரியாவிட்டால் ஆங்கிலம் தெரிந்த தமிழ் வலைப்பதிவரையோ, நண்பரையோ அல்லவா நாடவேண்டியுள்ளது.

அதற்கு நாமாக ஆங்கிலம் படித்துக்கொண்டால் என்ன? 

தமிழ் தமிழ் என்று பேசுவோரும், அதன் வளர்ச்சிக்காக தன்னார்வ தொண்டாற்றுபவர்களும் ஆங்கிலம் கற்றவர்களாகவே இருப்பதை அவதானியுங்கள். தாமும் ஆங்கிலம் கற்று, தம் பிள்ளைகளுக்கும் ஆங்கிலம் கற்பிப்பவர்களாகவே உள்ளார்கள் என்பது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

தமிழ் நமது தாய் மொழி அதனை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை தான். ஆனால் அதைக் காப்பதற்கும் இன்றைய சூழலில் ஆங்கிலம் கற்க வேண்டிய கட்டாயத்திலேயே நாம் உள்ளோம் என்பதே எமது நிலமை.

தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே நேரம், ஆங்கில கல்வியின் வளர்ச்சிக்கும் பாடசாலைக் கல்வி மட்டத்தில்  காலத்திற்கு  உகந்தப்  பாடத்திட்டங்கள் வகுக்கப் படவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

ஆங்கிலம் பாடப் பயிற்சி வலைத்தளத்திற்கு திரும்பவும்

 
Today, there have been 3 visitors (4 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free